WikiExpert logo
    Sep 7, 2021 in Public Speaking

    கொரோனாவின் தாக்கம்: அரசுத்துறை, மருத்துவத்துறை மற்றும் பொதுமக்களின் எண்ணங்களும் செயல்களும்

    கொரோனாவின் தாக்கம்: அரசுத்துறை, மருத்துவத்துறை மற்றும் பொதுமக்களின் எண்ணங்களும் செயல்களும் கொரோனா அரசுத் துறை மக்கள் ஊரடங்கு அறிகுறிகள் கொரோனாவின் நாட்களில் அரசுத்துறை, மருத்துவத்துறை மற்றும் பொதுமக்களின் எண்ணங்களும் செயல்களும் வேறுபட்ட Public Speaking
    கொரோனாவின் தாக்கம்: அரசுத்துறை, மருத்துவத்துறை மற்றும் பொதுமக்களின் எண்ணங்களும் செயல்களும்

    இன்று உலகளவில் கருப்பொருளாக பேசப்படுகிற கொடிய நோயாகிய கொரோனாவை ஒழிக்க அனைத்து அரசுத்துறைகளும், பல்வேறு நிலையில் வளர்ச்சியைக் கண்டுள்ள மருத்துவத்துறைகளும் போராடி வருகிறதை நாம் கண்கூடாக காண்கிறோம். ஆனபோதிலும், எதிர்பார்த்த விகிதத்தில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், தொற்றினிமித்தம் மரணிப்போரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்தபாடில்லை. எனவே, உலகளவில் ஊரடங்கு (Lockdown) என்ற செயல்பாட்டை கடந்த மார்ச், 2020 ஆம் ஆண்டு முதல்  ஒவ்வொரு வளர்ந்த மற்றும் வளருகின்ற நாடும் நடைமுறைப்படுத்தியது. இத்தகைய ஊரடங்கானது, உலகளவில் அனைத்து  நாடுகளிலும் மூன்று விதமானமான பிரிவுகளை தெளிவுபடுத்தியது. 1. அரசு, 2. மருத்துவத்துறை, 3. மக்கள். இத்தகைய பிரிவினரிடையே கொரோனா என்ற கொடிய நோய் மூன்று வித்தியாசமான சிந்தனைகளை உருவாக்கிற்று. அதாவது, 1. அரசை எடுத்துக்கொண்டால், மக்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதிலும், அவர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்த்து இருக்க வேண்டியதாயுள்ளது , 2. மருத்துவத்துறையை எடுத்துக்கொண்டால்,  கொரோனாவின் தாக்கத்தை குறித்து ஆராயவும், அதன் மாறுபடும் வீரிய தன்மையை குறித்து பயத்தை பிரதிபலிப்பவராக மாறவேண்டிய நிலை உள்ளது , 3. மக்களை எடுத்துக்கொண்டால், அவர்களின் அன்றாட தேவைக்காக வெளியே செல்லவேண்டிய நிலை, மருத்துவத்துறையில் மருந்தின் பற்றாக்குறை மற்றும் போதிய அளிப்பின்மை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  மேலும், அரசின் கடுமையான கட்டுப்பாடுகள் மேலும் தாங்கள் பொருளாதாரத்தில் நெருக்கடியை சந்திக்கிறவர்களாயிருக்கிறார்கள். அதன் விளைவாக, சுமார் 14 மாதங்களுக்கு மேல் கடந்தும் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடரவில்லை. 
    ஜான்ஸ் கொப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வு விபரத்தின்படி உலகளவில் 10/05/2021 அன்றைய நிலவரப்படி, கொரோனா பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை பெல்ஜியம் (10,16,609), இத்தாலி (4,11,210), யுனைட்ட் கிங்டம் (44,50,578), பிரான்ஸ் (58,38,295), ஸ்வீடன் (10,07,795), ஸ்விச்சர்லாந்து (6,70,673), ஆஸ்திரேலியா (6,31,076), ஜெர்மனி (35,30,887), மேலும், முதலாவது இடத்தில் யுனைட்ட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா (3,27,07,750), இரண்டாவது இடத்தில்  இந்தியா (2,26,62,575) உள்ளது. ஆனபோதிலும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட ஒரு லட்சம் பேரில் அதிகமாக பெல்ஜியம் 214 நபர்களும், மிகவும் குறைவாக இந்தியாவில் 18.01 நபர் என்ற விகிதத்திலும் இறப்பு எண்ணிக்கை உள்ளது. இத்தகைய கொரோனா தாக்கத்தின் போக்கு இந்திய அளவில் சற்று குறைந்த அளவிலாகிலும் உயிரிழப்புகளை சந்திக்க வழிவகுக்கும். 
    இந்திய அளவில் 19/05/2021 அன்றைய நிலவரப்படி கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை , ஆந்திர பிரதேசம் (1498532), டில்லி (1406719), கர்நாடகா, (2306655), கேரளா (2233468), மகாராஷ்டிரா (5467537), தமிழ்நாடு (1699225), உத்தர பிரதேசம் (1644849) ஆக உள்ளது. அதேநேரம், மரணிப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது மிக அதிகமாக மகாராஷ்டிராவில் 84371 நபர்கள் மரித்திருக்கிறார்கள். மேலும், 20/05/2021 அன்று இந்தியா டுடே என்ற ஆங்கில செய்தித்தாளில் வெளிவந்துள்ள இந்திய மருத்துவச் சங்கத்தின் அறிக்கையிபடி, இந்தியாவில் மொத்தம் 12 லட்சத்திற்கும் அதிகமான மருத்துவர்கள் உள்ள நிலையில், கொரோனாவின் முதல் அலையில் 748 மருத்துவர்களும், இரண்டாவது அலையில் 300 மருத்துவர்களும் மரித்துள்ளதால் கொரோனாவினால் மரித்த மொத்த மருத்துவர்களின் எண்ணிக்கை 1000 க்கும் அதிகமாக இருக்கிறது என்றால் கொரோனாவின் தாக்கம் எந்த அளவிற்கு உள்ளது என்பதை சிந்திக்க வேண்டும். 
    அபாயகரமான கொரோனா அறிகுறிகள் 
    கடந்த 2020 ஆம் ஆண்டில் கொரோனாவின் அறிகுறிகளாக நன்கு அறிவுத்தப்பட்டவை தலைவலி, காய்ச்சல், உடல் சோர்வு, தொண்டை வலி, நுரையீரல் பாதிப்பு மற்றும் சுவையின்மை. ஆனால், தற்போது மேற்கூறிய அறிகுறிகளொடு, ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகளாக கருப்பு மற்றும் வெள்ளைப் பூஞ்சைகள் தோன்றுவது என அறிகுறிகளும், பாதிப்புகளும் நீண்டுகொண்டே போகிறது. இதற்கான காரணம் என்ன என்று ஆராய்ந்தால், நாம் வழிநடத்தப்பட்ட பாதைகளை சற்று பின்னிட்டு பார்க்க வேண்டியுள்ளது. நாம் என்ன தான் அரசின் வழிகாட்டுதலுக்கு கீழ்படிந்தாலும், நாம் கடந்து வந்த பாதையில் சில இடங்களில் நாம் தலைகுனிய வேண்டியுள்ளது அதாவது, கொரோனாவுக்கு எதிரான போராட்டமாக நாம் கரங்களை தட்டுவது, மின்விளக்குகளை அணைத்து மெழுகுவர்த்தி எரியச்செய்வது, கொரோனாவை விரட்டும் LED பல்புகளை எரியவிடுவது என்னும் பல. இத்தகைய சூழலில் அரசாங்கமும், மருத்துவத்துறையும், மக்களும் எவ்விதம் செயல்பட்டோம் என சிந்திக்க வேண்டியுள்ளது. மேலும், தற்போதய அறிகுறிகளுக்கு காரணமாக, அதிக நேரம் முககவசம் அணிவது நுரையீரல் பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு, நமது உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறையையும் ஏற்படுத்துகிறது என மக்களுக்குள் பரவலாய் பேசப்படுகிறது. மேலும், 50 வயதைக்   கடந்தோர் சாதாரணமாய் நடந்து செல்வதற்கு கூட அதிகப்படியான பிராண வாயு தேவைப்படும் பட்சத்தில், அவர்களும் தொடர்ச்சியாக முககவசம் அணிவதினால் தற்போதய அறிகுறிகள் அவர்களுக்கு அதிகம் காணப்படுவதாய் பேசப்படுகிறது.  
    மூன்று பிரிவினரின் எண்ணமும் கொரோனாவின் போக்கும் 
    அரசு, மருத்துவத்துறை மற்றும் மக்கள் ஆகிய முப்பிரிவினர்களின் சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள் தான் கொரோனாவின் இத்தகைய தாக்கத்திற்கு வழிவகுத்துள்ளது என பெரிதும் நம்பப்படுகிறது. 
    அரசு 
      மத்திய மற்றும் மாநில அரசுகளின் சிந்தனைகளைப்பொருத்தே அதன் செயல்பாடுகள் அமைகிறது. இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இந்நாள்வரைக்கும் கொரோனா என்ற கொடிய நோய்த்தொற்றிற்கு எதிராக போராடிவருகிறார்கள். அவற்றின் பிம்பமாக அரசுகள் பல்வேறு நிதி உதவிகளைச் செய்தும், மருத்துவத்துறை வளர்ச்சிக்காக பல ஆலோசனைகளை வழங்கியும் செயல்படுகிறது. ஆனபோதிலும், இந்த நோய்த்தொற்றிற்கு எதிராக எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. இதற்கு காரணமாக அரசின் சில செயல்பாடுகள் தோல்வியை தழுவியதோ என சிந்திக்க வேண்டியுள்ளது. அதாவது, இத்தகைய நோய்த்தொற்றினின் ஆரம்பகாலத்தில் மத்திய மாநில அரசானது, மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை எனக்கூறி ஊரடங்கு முறையை செயல்படுத்தியது. இதன் விளைவாக எந்த மாற்றமும் இல்லாமல் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்க்கைதரம் மிகவும் பாதிக்கப்பட்டது. இவற்றில் அரசின் திட்டமிடல் செயலிழந்து விட்டதோ என சிந்திக்க வேண்டியுள்ளது. மேலும், மக்களின் பொருளாதார நிலையை அரசு கணிக்கத்தவறிவிட்டது. அதாவது, கடும்கட்டுப்பாடு நாட்களில் மாத ஊதியம் வாங்குபவர்கள் தங்களுக்கு தேவையானவற்றை ஒரு மாத காலத்துக்கு சேமித்து பயன்படுத்தி பழகியிருக்கிறார்கள். ஆனால், தினசரி அல்லது வாரக் கூலி வாங்கும் தொழிலாளர்கள் இத்தகைய செயலில் பழக்கமின்மையால் அவர்களால் ஊரடங்கு நாட்களில் பிழைப்பிற்காக வேலை செய்யாமலோ, அன்றாட தேவைக்காக வெளியே செல்லாமலோ இருக்க முடியாது. ஆகவே, அரசின் திட்டமிடலில், மக்களின் சுதந்திரம் பொறுப்பற்றவைகளாக பார்க்கப்படுகிறது. ஆனபோதிலும், இன்று வரையிலும் அரசின் போராட்டம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வெற்றியடைவதில் பல பின்னடைவுகள் காணப்படுகிறது. மேலும், அரசின் இத்தகைய தொடர் செயல்பாடு, சிந்தனையாளர்களிடையே அரசு தன்னிடம் உள்ள குறைகளை மறைப்பதற்கே அனேகருடைய வாழ்வாதாரமும், நாட்டின் பொருளாதாரமும் கெடும் எனத் தெரிந்தும் இத்தகைய கட்டுப்பாடுகளை விதிக்கிறதோ என சிந்திக்க தூண்டுகிறது. அரசு தன்னுடைய வளர்ச்சி திட்டத்தைக் குறித்தும், நோய்த்தொற்றிற்கு எதிரான போராட்டத்தைக் குறித்தும் வெற்றியடைவோம் என்ற நம்பிக்கையோடு  செயல்படுகிறது. ஆனபோதிலும், அதிகபடியான சோதனைகள், வெற்றிக்கு வழிவகுக்காமல் நோய்த்தொற்றைக் குறித்த பயத்தையும், புதிய நோய்த்தொற்று (கொரோனாவின் 3ஆம் அலை, கருப்பு மற்றும் வெள்ளைப் பூஞ்சை) பரவும் அபாயத்தையுமே வெளிபடுத்துகிறது. ஆனால், தமிழகத்தை பொருத்தவரையில் தற்போதய அரசு கொரோனா நோய்த்தொற்றை ஒழிப்பதில் மிகவும் மும்முரம் காட்டிவருகிறது. கொரோனா காலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு அறிவித்தும், அவற்றை தீவிரமாக செயல்படுத்தியும் வருகிறது. மேலும், அரசின் செயல்பாடுகள் வெற்றியாய் அமைவதற்கு நாட்டின் நிலைமையை நன்கு புரிந்து திட்டமிடல் அவசியமாகிறது. 
    மருத்துவத்துறை 
                 துறைகளிலே மருத்துவத்துறையானது மிகவும் பொறுப்புள்ள மற்றும் உயிர்களை பாதுகாக்கிற துறையாக சிறந்து விளங்குகிறது. கொரோனா நோய்த்தொற்று பரவத்துவங்கிய நாள்முதல் இந்நாள்வரைக்கும் இத்துறையினர் ஓய்வின்றி பணியாற்றி நோய்த்தொற்றிற்கு எதிராக போராடிவருகிறார்கள். ஆகையால், இத்தகைய போராட்டதிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வெற்றியை அடைவோம் என்று செயல்படுகிறது. ஆனபோதிலும், மருத்துவத்துறையில் சகலமும் சிறப்புடன் செயல்படுகிறது என்று தீர்மானிக்க முடியாத நிலை உள்ளது. காரணம், இன்னும் அநேக அரசு மருத்துவமனைகள் போதிய உபகரணங்கள் வசதியின்றி இயங்குகின்றன. கொரோனா காலத்தில் தடுப்பூசி மற்றும் மருந்துகள் தட்டுப்பாடு, போதிய பராமரிப்பின்மை மக்களிடையே மருத்துவத்துறையின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மருத்துவத்துறைகளும் தங்களால் இயன்ற மட்டும் செயல்படுகிறோம் என்கிற அறிக்கையானது, தங்களால் ஒரு கட்டத்திற்கு மேல் முடியாது என்பதை மறைமுகமாக விளக்குகிறது. அதிகப்படியான சோதனைகளை மேற்கொள்ளும்படி அரசின் கடும் கட்டுப்பாடு, மருத்துவமனையில் ஏதோ பராமரிக்கப்படுகிறோம் என மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நம்பிக்கை மருத்துவத்துறையை நெருக்கி தாங்கள் என்ன செய்வதென்று அறியாமல் திகைக்கும் நிலைக்கு சென்றுள்ளது. இத்தகைய சூழலில் மருத்துவத்துறையானது தங்களது வெளிப்படையான உண்மைத்தன்மை உடையதாகவும், மக்களிடையே நோய்த்தொற்றைக் குறித்த பயத்தையும் போக்க செயல்பட வேண்டியுள்ளது. 
    மக்கள்
    அரசு மற்றும் மருத்துவத்துறைக்கு அடுத்ததாக 'மக்கள்' என்னும் பிரிவினரையும் ஆராயவேண்டியுள்ளது. அரசு எவ்வளவுதான் வளர்ச்சித் திட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் விதித்தாலும், மருத்துவத்துறைகள் எவ்வளவுதான் போராடினாலும், மக்களின் சிந்தனைகளும் செயல்பாடும் அவற்றிலிருந்து வேறுபடுமாயின் முயற்சிகள் அனைத்தும் வீணடிக்கப்படுகிறது. மேலும், அரசும், மருத்துவத்துறையும் மக்களின் தேவை மற்றும் சிந்தனை, செயல்திறன் அறிந்து செயல்படுமாயின் இத்தகைய சூழலை மேற்கொள்ள முடியும். 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இன்று வரையிலும் முழுமையாக நீக்கப்படாமல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொடரும் அபாயம் நீடித்துவருகிறது. இத்தகைய ஊரடங்கில் பெரும்பாலும் மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் அனுதினமும் வெளியே சென்றதாக பார்க்க முடிந்தது. இதற்கு காரணம், ஊரடங்கிற்கு  மக்களின் ஒத்துழையாமை என்று கூறுவதா? அல்லது அவர்களின் தேவைகளுக்காக என்று கூறுவதா?. இந்தக் கேள்விக்கான விடைக்காக பொதுமக்களை இரண்டு வகையாக பிரித்து விடைகள் சேகரிக்கப்பட்டது. அதாவது, 1. பணபலமுள்ளவர்கள் 2. பணபலமில்லாதவர்கள் (நடுத்தர மற்றும் ஏழை மக்கள்), கேள்வி என்னவென்றால், அரசு ஊரடங்கை விதித்தும், அத்யாவசிய தேவைகளை தவிர வேரு எதற்காகவும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியும் பொது மக்கள் வெளியே செல்வதை பார்க்கமுடிகிறது இதற்கு காரணம் மக்களின் தேவைகளா? அல்லது கொரோனா நோய்த்தொற்றைக் குறித்த விழிப்புணர்வின்மையா?. இக்கேள்வியை முதலாவது பணபலமுள்ளவர்களிடம் (இவர்கள் வீட்டிற்குள் இருப்பவர்கள், மிகவும் அத்யாவசிய தேவைகளுக்கே படு பாதுகாப்பாக வந்து செல்பவர்கள்) கேட்கும்போது அவர்கள் சொன்ன பதில் என்னவென்றால், மருத்துவமனையில் அனுதினமும் மரித்துக் கொண்டிருக்கும் மக்களையும், தொற்று பாதிக்கப்பட்டு பாடுபடும் மக்களையும் பார்க்கும்போது, ஊரடங்கின் நாட்களில் வெளியே சுற்றித்திரியும் மக்களுக்கு கொரோனா நோய்த்தொற்றைக் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை மேலும், ஊரடங்கை இன்னும் தீவிரப்படுத்த அரசு முயல வேண்டும் என்றனர். இரண்டாவதாக பணபலமில்லாதவர்களிடம் (இவர்கள் அத்யாவசிய மற்றும் பிற தேவைகளுக்கும் வெளியில் நடமாடுபவர்கள்) கேட்டபோது அவர்கள் சொன்ன பதில், சோசியல் மீடியாக்கள் மூலம் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களையும், மரணிப்போரையும் பார்க்கும்போது, எங்களுக்கு பயமும், பொதுமக்களுக்கு கொரோனா நோய்த்தொற்றைக் குறித்த விழிப்புணர்வு இல்லை என்றனர். அப்போது, நீங்கள் எதற்காக வெளியே சுற்றித் திரிகிறீர்கள் எனக் கேட்டதற்கு, எனக்கு அத்யாவசிய தேவை அதனால்தான் என்றார்கள். அப்படியானால், தங்களுக்கென்றால் அத்யாவசிய தேவை, மற்றவர்கள் என்றால் போதிய விழிப்புணர்வு இல்லை என்று அர்த்தமா எனக் கேட்டதற்கு பதில் இல்லை. ஆக, இன்றைய நிலையில் பெரும்பாலான நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தங்கள் உழைப்பை வெளிப்படுத்தவும்,  தேவைகளை நிறைவு செய்யவும் ஊரடங்கு எப்போது தளர்த்தப்படும் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறார்கள். எனவே, பொதுமக்களின் செயல்பாடுகளில் ஊரடங்கானது அவர்களின்  தேவைகளை அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், குழந்தைகளின் கல்வி வெகுவாய் பாதிக்கப்பட்டுள்ளதால் பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைக் குறித்த பயம் அதிகரித்திருக்கிறது. காரணம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கற்றறிதல் திறன் வெகுவாகப்  பாதிக்கப்பட்டு சிலர் புரிந்து கொள்ளாமலே படித்துக்கொண்டு இருக்கிறார்கள் சிலர் கல்வி என்கிற கடமையையும், பொறுப்பையும் விட்டு வெகு தொலைவில் சென்று விட்டனர். எனவே, பிள்ளைகளைக்குறித்த பெற்றோரின் கனவு உறதியற்றதாய் உள்ளது. உலகளவில், கொரோனா நோய்த்தொற்றை ஒழிப்பதில் தடுப்பூசியின் பங்கு இன்றியமையாததாக பேசப்படுகிறது. ஆயினும், தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பொதுமக்கள் மிகுந்த தயக்கம் காட்டுகின்றனர். காரணம், தடுப்பூசியைக் குறித்த போதிய விழிப்புணர்வின்மை, அவற்றைப் போட்டுக்கொள்வதால் ஏதாகிலும் பக்க விளைவுகள் ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது. எனவே, அரசு போதிய விழிப்புணர்வை கொண்டு செல்ல முனைப்புக் காட்டுமாயின் கொரோனா நோய்த்தொற்றை ஒழிக்கலாம். 
    சீர்திருத்த வழிமுறைகள் 
               இத்தகைய கடினமான நோய்த்தொற்றின் காலங்களை மேற்கொள்ள சில வழிமுறைகளை முப்பிரிவினரும் செயல்படுத்த முயலுவோமாயின், வெற்றியை ருசிக்கலாம். எனவே, இக்கட்டுரையில் எழுதப்பட்டுள்ள வளர்ச்சிக்கான கருத்துக்கள், சிந்தனைகளுக்கு மற்றும் செயல்பாட்டிற்கு என இரண்டாகப் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.
    செயல்பாட்டிற்கு 
             முப்பிரிவினரும் கொரோனா என்னும் நோய்த்தொற்றை எதிர்த்து அனுதினமும் போராடிவருகிறார்கள். அரசு மற்றும் மருத்துவத்துறை சார்பாக விழிபுணர்வுகளும், தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனபோதிலும், அனுதினமும் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தும், சிறிது குறைந்தும் வருகிறது. இதற்கு காரணமாக, ஊரடங்கில் பொது மக்களின் ஒத்துழைப்பின்மை, மருந்துகள் மற்றும் தடுப்பூசி பற்றாக்குறை, தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தேவையற்ற அச்சம், மருத்துவத்துறையில் குறைவான உபகரணங்கள் எனப் பல கூறினாலும். அதற்கு அப்பாற்பட்டு வளர்ச்சி என்கிற தொலை நோக்கில் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் திட்டங்களால் எதிர்பார்க்கும் பலனில் சுனக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, அதோடு கூட செயல்பாட்டிற்கு சில வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. 
    * மக்கள் மத்தியில் கொரோனா நோய்த்தொற்றைக் குறித்த பயத்தை மாற்ற வேண்டும்.
    * கொரோனா தடுப்பூசி செலுத்திகொள்வதினால் ஏற்படும் நன்மைகளைச் சொல்லி, அவற்றினால் ஏற்படுவதாய் சொல்லப்படுகிற பக்கவிளைவுகளைக் குறித்த பயத்தை போக்க செயல்பட வேண்டும். 
    * மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசி வழங்குவதில் கால தாமதத்திற்கு இடங்கொடாமல் அவைகளை துரிதமாக பாதிக்கப்பட்டோருக்கு கிடைக்கும் வகையில் இலவசமாக வழங்க வேண்டும். ஏனென்றால், மருத்துவ பொருட்களை பணம் கொடுத்து வாங்கி பயனடைய முடியாத ஏழை மக்கள் இன்னமும் இருக்கிறார்கள். ஒரு வேளை, கொரோனாவைக் குணப்படுத்தும் மருந்துகளை இலவசமாக கொடுக்க முடியாது என்ற திட்டம் அரசிடையே இருக்குமானால், அவைகளை பணத்திற்கு வாங்கி பயனடைய முடியாத தொற்று பாதிக்கப்பட்டோரின் மூலமாக மீண்டும் மீண்டும் கொரோனாவின் தாக்கம் உருவாகலாம். 
    * மருத்துவமனையில் கொரோனா வேரு எவரையும் தொற்றுவதில்லை என்று உறுதியளிக்க முடியாததால், தொற்று பாதிக்கப்பட்டோர் அதிக எண்ணிக்கையில் சேர்க்கப்படா வண்ணம் அவர்களை தங்கள் வீடுகளில் வைத்து பராமரிக்கும்படி எற்பாடு செய்யலாம். அதாவது எவர்களுக்கு தங்களது வீடுகளில் இரண்டு அறைகளுக்கு மேல் உள்ளதோ, அதில் ஏதாவது அறையை தங்களுக்கென்று தெரிந்தெடுத்து பயன்படுத்திக் கொள்ள அறிவுரை வழங்க வேண்டும். 
    * பகுதி செவிலியர்களின் (Area Nurse) எண்ணிக்கையை ஒன்றிலிருந்து நான்காக அதிகரித்து, ஒவ்வொருவருக்கும் பகுதிகளை பிரித்துக்கொடுத்து, வீட்டில் தனிமைபடுத்தியிருக்கும் தொற்று பாதித்தோரை உரிய பாதுகாப்போடு அனுதினமும் சோதனை செய்து வேண்டிய மருந்துகளை வழங்கலாம்.  
    * மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழை மக்களை அதாவது போதுமான வீட்டு வசதி இல்லாதவர்களை மருத்துவமனையில் பராமரிக்கலாம். 
    * கொரோனா அறிகுறிகள் தெரியவந்து மருத்துமனையில் சோதனை செய்து தொற்று உறுதி செய்யப்பட்டால், அந்த நபரின் தகவலை அந்த பகுதி செவிலியரிடம் தெரியப்படுத்தி பிற்பாடு சோதனைகள், தடுப்பூசி மற்றும் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள வழி செய்யலாம். 
    * அவ்வாறு வீடுகளில் தனிமைப்படுத்தப்படும் நபருக்கு மேற்படியாக ஆக்சிஜன், தடுப்பூசி போன்றவை தேவைப்படும் பட்சத்தில் அரசு அத்தகைய சேவையை திறம்பட வழங்கி நோய்த்தொற்றை எளிதில் இல்லாமல் பண்ணலாம். 
    சிந்தனைகளுக்கு 
              கொரோனாவின் பிறப்பிடமாக சீனா தேசத்தின் வூகாண் மாகாணம் என்று அறியப்படுகிறது. மேலும், உலகளவில் வல்லுநர்கள், இத்தகைய நோய்த்தொற்று சீனா தேசத்திலிருந்து புறப்பட்டு மிகப்பெரிய அழிவுகளை உலக நாடுகள் சந்தித்தாகவும், இது ஒரு 'பயோ வார்' எனவும் கேட்க நேரிடுகிறது. அப்படியானால், அனைத்து நாடுகளுக்கு ஒன்றுக்கொன்று  இது போன்ற (பயோ வார்) போர்த் தந்திரங்களை கையாளும் சூழ்நிலை உருவாகும் என்றால் உலகளவில் மக்கள் தொகை பெருமளவில் பாதிப்படைவதோடு பொருளாதாரமும் நலிவடைய நேரிடும். எனவே, நாடுகளுக்கு நாடு சமாதானத்தை பேணிக் காப்பது மிக அவசியம். எப்படி ஒரு மாணவனால் அருகிலிருக்கும் மாணவனொடு சண்டையிட்டு மகிழ்சியாய் இருக்க முடியாதோ, எப்படி நம்முடன் வேலை செய்யும் நபரோடு சண்டையிட்டு வேலை செய்ய முடியாதோ, எப்படி நம் வீட்டின் அருகாமையிலிருப்போருடன் சண்டையிட்டு மகிழ்சியாய் வாழ முடியாதோ, அப்படியே நம் நாட்டின் அயலகத்தாரிடம் பிரிவு உண்டுபண்ணி சமாதானமாய் வாழ முடியாது. எனவே, அயல்நாட்டினரிடம் ஒற்றுமையையும், சமாதானத்தையும் பேணிக் காக்க முயலுதல் அவசியமாகிறது. 
    இறைநம்பிக்கை மிகுந்த நம் நாட்டில், இத்தகைய நோய்த்தொற்று கடவுளின் தீர்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. அப்படியானால், முப்பிரிவினர்களின் சிந்தனைகளும், செயல்பாடும் நீதியாயும், நியாயமாயும், உண்மையாயும் இருக்க வேண்டியதாயுள்ளது. மற்றவர்களை கெடுத்து, அழித்தோ வாழ நினைக்கும் தன்மைதான் இன்று நாம் சந்திக்கிற நிலை.
    அரசானது தன்னகத்தே கொண்ட அதிகாரத்தை உண்மையாக, நீதியாக மக்களின் வாழ்க்கைத் தரம் மேன்மையடையப் பயன்படுத்த வேண்டும். மக்கள் அரசின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு எதிராக செயல்படாமல் அவர்கள் உணர்வுக்கு இடம் கொடுக்க வேண்டிய அவசியம் காணப்படுகிறது. 
    மருத்துவத்துறையும் தங்கள் பணியை திறம்பட சேவை நோக்கத்தோடு உண்மையாய் செயல்படுத்த வேண்டிய நிலை உள்ளது. 
    இவ்வாறு கொரோனா தொற்றின் கோர முகத்தைக் கிள்ளி எறிவது மனித இனத்திற்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் தேவையான நடவடிக்கையாய் உள்ளது. எனவே, இத்தகைய வழிமுறைகளை அரசுத்துறை, மருத்துவத்துறை மற்றும் பொதுமக்கள் ஆகிய முத்தரப்பினரும் சிந்தித்து கொள்கை மாற்றத்தோடு மனமாற்றத்துடன்கூடிய முழு ஒத்துழைப்பை நல்குவது இக்காலகட்டத்தின் தேவையாயிருக்கிறது.